அமர்நாத் யாத்திரைக்கு 3.5 லட்சம் பேர் முன்பதிவு
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.;
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பாகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்சா பந்தன் அன்று முடிவடையும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
யாத்திரைக்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். மேலும், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலர்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் படிப்படியாக குறைந்து, எல்லைப்பகுதியில் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்த சூழலில், இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்களை வரவேற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.