தெருநாய் கடித்து குதறியதில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

கன்னம், கழுத்து பகுதிகளில் பலத்த காயமடைந்த சிறுமி வலியால் அலறி துடித்தாள்.;

Update:2026-01-15 08:55 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு அலைனா லோகா (வயது 10) என்ற மகள் இருந்தாள். சிறுமி நவநகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் சிறுமி கடந்த மாதம் டிசம்பர் 27-ந் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று சிறுமியை பார்த்ததும், அவள் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் கன்னம், கழுத்து பகுதிகளில் பலத்த காயமடைந்த சிறுமி வலியால் அலறி துடித்தாள். அவளின் சத்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோர் நாய் சிறுமியை தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் கிடந்த கல் மற்றும் கட்டையால் நாயை விரட்டியடித்தனர்.

பின்னர் சிறுமியை மீட்டனர், இதில் சிறுமிக்கு கண், மூக்கு போன்ற முக பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. மேலும் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியை பெற்றோர் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர். பின்னர் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாகல்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி அலைனா லோகா சேர்க்கப்பட்டாள். பின்னர் அங்குள்ள டாக்டர்களின் ஆலோசனையின்படி அலைனா லோகா உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டாள்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அலைனா லோகா பரிதாபமாக இறந்துபோனாள். இதனை கண்டு சிறுமியின் பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. மேலும் இதுகுறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்