ஈரானில் இருந்து வெளியேறுங்கள்; இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.;

Update:2026-01-15 08:47 IST

புதுடெல்லி,

ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரான் நாட்டில் மற்றும் அதனை சுற்றி நிலவ கூடிய சூழ்நிலை குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சியுடன், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். இந்நிலையில், ஈரானில் இருந்து வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் வலியுறுத்தி உள்ளது. ஈரானுக்கு தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே, ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள் என தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் வழங்கி இருந்தது. ஈரானில் ஏற்பட்டு உள்ள போராட்டம் வன்முறையாக உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால், கைது நடவடிக்கைகளும், காயங்களும் ஏற்பட கூடும். ஈரான் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஈரான் அரசு, மொபைல் போன், தொலைபேசி மற்றும் தேசிய அளவில் இணையதள நெட்வொர்க் சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன. ஜனவரி 16-ந்தேதி (நாளை) வரை ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமானங்கள் தொடர்ந்து வரம்புக்குள் வைக்கப்பட்டு உள்ளன. பல விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

அதனால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படியும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்