ஆட்டோ மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-06-05 20:48 IST

கோப்புப்படம் 

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவாவில் ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக இன்று மதியம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை 30-ல் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள நைகர்ஹியைச் சேர்ந்த 10 பேர் பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி வளைவு ஒன்றில் திரும்பியபோது திடீரென பின்னோக்கி உருண்டு பின்னால் வந்த ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளும் ஆட்டோ மீது விழுந்தது.

இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹிராலால் ஜெய்ஸ்வால் (65 வயது), அவரது மகன் ராம்ஜீத் ஜெய்ஸ்வால் (38 வயது), அவரது மருமகள் பிங்கி (35 வயது), பேத்தி அம்பிகா (8 வயது) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பிரவீன் (12 வயது), மான்சி (7 வயது) மற்றும் அரவிந்த் (6 வயது) ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்-மந்திரி நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று ரேவா மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்