சைபர் மோசடியில் சிக்கி ரூ. 32 லட்சத்தை இழந்த மூதாட்டி
மூதட்டியிடம் ரூ. 32 லட்சத்தை திருடிய சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை அருகே முலுண்டு புறநகர் பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டி கணவருடன் வசித்து வந்தார். இதனிடையே, அந்த மூதாட்டியின் செல்போனுக்கு வீடியோ கால் மூலம் கடந்த சில நாட்களுக்குமுன் கிரைம் பிரிவு போலீசில் இருந்து பேசுவதாக மர்மநபர் தொடர்பு கொண்டுள்ளார். மேலும், மூதாட்டியின் வங்கி கணக்கு வழியாக ரூ. 2.5 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், அதற்காக ரூ. 25 லட்சம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்டவிரோத பரிவர்த்தனை தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் மூதாட்டியை மிரட்டியுள்ளார். மேலும், வழக்கு விசாரணைக்காக வங்கி கணக்கில் உள்ள பணத்தை தாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும்படி மூதாட்டியிடம் அந்த சைபர் கும்பல் மிரட்டியுள்ளது. அந்த கும்பலை சைபர் போலீசார் என நினைத்த மூதாட்டி தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 32 லட்சம் பணத்தை சைபர் கும்பல் கொடுத்த வங்கி கணக்கிற்கு ஆன்லைன் டிரான்ஸ்பவர் மூலம் அனுப்பியுள்ளார். மேலும், இந்த பரிவர்த்தனைக்கான ஸ்கிரீன் ஷார்ட்டையும் அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
இது குறித்து தனது மருமகனிடம் மூதாட்டி தெரிவித்துள்ளார். மாமியார் சைபர் மோசடியில் சிக்கியதை உணர்ந்த மருமகன் உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மூதாட்டி முலுண்டு போலீசார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதட்டியிடம் ரூ. 32 லட்சத்தை திருடிய சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.