ராஜஸ்தானில் நெஞ்சுவலியால் 9 வயது சிறுமி உயிரிழப்பு

சிறுமிக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-07-17 12:48 IST

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், சீகர் மாவட்டத்தில் டாண்டா-ராம்கர் என்ற பகுதியில் ஆதர்ஷ் வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த பிராச்சி குமாவத் (9) என்ற சிறுமி மதிய உணவு நேரத்தில் டிபன் பாக்ஸை திறக்க முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஆதர்ஷ் வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் நந்த் கிஷோர் இது குறித்து கூறியதாவது: கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பிராச்சி டிபன் பாக்ஸை திறந்தபோது மயங்கி விழுந்தார் என்று கூறினார்.

உடனே, பள்ளி ஊழியர்கள் அந்த சிறுமியை மீட்டு டாண்டா-ராம்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமிக்கு டாக்டர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்து, அவசர மருந்துகளும் கொடுத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சீகர் எஸ்.கே. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் பிராச்சி மயக்க நிலையில் இருந்தாள். சீகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்ததும், மருத்துவர்கள் பரிசோதித்து சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, டாண்டா-ராம்கர் மருத்துவமனையின் மருத்துவர் சுபாஷ் வர்மா கூறுகையில்,

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறுமி மயக்கமான நிலையில், சுவாசிக்க சிரமத்துடன் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த போது, சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. சிறுமிக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றார்.

இந்த சம்பவத்தால் சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும், மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது வயது சிறுமி நெஞ்சு வலியால் இறந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்