பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஜாமீனுக்கு ராகுல் காந்தி கண்டனம்
மனிதாபிமானமற்ற சம்பவங்களால் மரணமடைந்த சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்டு . பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, பாதிக்கப்பட்டவரையோ அவரின் தாயையோ அச்சுறுத்த கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீனும் வழங்கியுள்ளது.
இந்தநிலையில், மரணமடைந்த சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
உத்தர பிரதேசம் உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன், பாதிக்கப்பட்டவருக்கு அநீதியா? உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு விடுதலை தரப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது.
மக்களாட்சியில் குரல் எழுப்புவது உரிமை, அதை ஒடுக்குவது குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும். மனிதாபிமானமற்ற சம்பவங்களால் மரணமடைந்த சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம் என அதில் பதிவிட்டுள்ளார்.