ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-06-26 17:26 IST

புதுடெல்லி,

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பயணிகளும், விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டியின் ஒரு பகுதியான, விமானத்தின் பறப்பு உயரம், வேகம், இயந்திர செயல்பாடு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யும் விமானத் தரவு பதிவுக் கருவி (எஃப்.டி.ஆர்.) 13-ம் தேதி மீட்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கருப்பு பெட்டியின் மற்றொரு பகுதியான, விமானி அறையின் உரையாடல்களைப் பதிவு செய்யும் குரல் பதிவுக் கருவி (சி.வி.ஆர்.) மீட்புக் குழுவினரால் தேடப்பட்டு, மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் முழுமையான பாகங்களும் கிடைத்திருப்பதால், விபத்துக்கான காரணங்களை முழுமையாகக் கண்டறிய முடியும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டது. தற்போது கறுப்புப் பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. கறுப்புப் பெட்டியில் இரண்டு முக்கியப் பகுதிகளில் இருந்து தரவுகள் மீட்கப்பட்டு அவற்றை பகுப்பாய்வு செய்யும் பணி நடக்கிறது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்