அமெரிக்க வரி பிரச்சினைக்கு 8 வாரங்களில் தீர்வு ஏற்படும்: தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை
நடப்பு நிதியாண்டில் வர்த்தகம் எழுச்சி பெற்றுள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கூறினார்.;
கொல்கத்தா,
கொல்கத்தாவில், பாரத வர்த்தக சபை ஏற்பாடு செய்த உரையாடல் நிகழ்ச்சியில் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி நீடித்தால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி குறையும். வரி பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 8 முதல் 10 வாரங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று எனது உள்ளுணர்வு சொல்கிறது.
இந்தியா, ஒரு கீழ்நடுத்தர வர்க்க வருவாய் பொருளாதாரம். நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. கொரோனாவுக்கு பிறகு மற்ற நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. உற்பத்தி, சேவை, வேளாண்மை ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிய அளவில் காரணமாக இருக்கும். நுகர்வு, முதலீடு ஆகியவை வளர்ச்சியை பெருக்கும்.
சமீபத்தில், ஜி.எஸ்.டி. வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டதால், பொதுமக்களிடையே அதிக பணம் புழங்கும். நகர்ப்புறங்களில் நுகர்வு அதிகரிக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் வர்த்தகம் எழுச்சி பெற்றுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு ஆரோக்கியமாக உள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவாக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து வருவது உண்மைதான். இருப்பினும், பொருளாதார பலத்தை வைத்து பார்த்தால், நீண்ட கால அடிப்படையில், ரூபாய் தனது மதிப்பை தக்கவைத்துக்கொண்டு வலிமையடையும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.