'மோந்தா' புயலால் ஆந்திராவுக்கு ரூ.5,265 கோடி இழப்பு - சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.;
அமராவதி,
வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா புயல், நேற்று இரவு மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. இந்த புயலால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் பாதிப்பு குறித்து பேசியதாவது;
”நாங்கள் செய்த முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, ஒட்டுமொத்தமாக ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை ரூ.2,079 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதில், விவசாயத்தில் ரூ.829 கோடி, தோட்டக்கலை ரூ.40 கோடி, பட்டுப்புழு வளர்ப்பில் ரூ.65 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் அரிக்கப்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
புயலால், எதிர்பார்த்த இடங்களுக்கு அதிகமான பகுதிகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவில் 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. 98.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.