மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.;
புதுடெல்லி,
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான நேற்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ‘அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிராகரிக்க முடியும். கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட தொடங்கினால், மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரியும் ரிட் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படும்.கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கெடு விதித்து கூறிய தீர்ப்பு சட்டப்படி சரியில்லை என்று கூற அரசியல்சாசன அமர்வுக்கு அதிகாரம் உண்டு’ என்று வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதாடியபோது, ‘கவர்னரின் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொண்டு உத்தரவிட முடியாது. அரசமைப்பு சாசனத்தை சுப்ரீம் கோர்ட்டு திருத்தி எழுத முடியாது’ என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கெடு விதித்த விவகாரத்தில் ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.