இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு

பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த முடியாத வகையில், அந்நாடு ஜூலை 24-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு தடையை நீட்டித்துள்ளது.;

Update:2025-06-24 07:57 IST

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.

இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்ததற்காக, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களை நாட்டில் இருந்து வெளியேறவும் இந்திய வெளியுறவு செயலகம் உத்தரவிட்டது. இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது.

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தியது. இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு அப்போது கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

எனினும், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை ஏப்ரல் 23-ந்தேதி முதலில் இந்தியா மூடியது. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதம் வரையே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும். இந்த சூழலில், பாகிஸ்தான் விமானங்களுக்கு எதிரான தடையை மே 23-ந்தேதி வரை முதலில் மத்திய அரசு நீட்டித்தது.

இதன்பின்னர் இந்த தடை ஜூன் 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை இன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், ஜூலை 24-ந்தேதி வரையிலான ஒரு மாதத்திற்கு, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மத்திய அரசு தடையை நீட்டித்து அறிவித்து உள்ளது.

இதேபோன்றதொரு தடையை பாகிஸ்தான் அரசும் விதித்து, கடைப்பிடித்து வருகிறது. இதன்படி, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த முடியாத வகையில், அந்நாடு ஜூலை 24-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு தடையை நீட்டித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்