ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்கு தள்ளிய வாழைப்பழம்
மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.;
புதுடெல்லி,
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில், பழங்களும் அடங்கும். அந்த வகையில், இதுவரை திராட்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, அதை பின்னுக்கு தள்ளி வாழைப்பழம் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.2,474 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழம் 2024-25-ம் ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்து, ரூ.3,209 கோடியாக உயர்ந்துள்ளது. திராட்சையில் வைட்டமின்கள் சி, ஏ, கே, பி6 ஆகியவை உள்ளன. அதேபோல், வாழைப்பழத்திலும் சி, ஏ, பி6 ஆகிய வைட்டமின்கள் உள்ளன. திராட்சையை விட வாழைப்பழம் விலை குறைவு என்பதால், தற்போது வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பழ வகைகளில் முதலிடம் பிடித்துள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. இந்தியாவில், பன்னீர் திராட்சை தமிழகத்தில் அதிகம் விளைகிறது. இதேபோல், வாழைப்பழம் ஆந்திராவில்தான் அதிகம் விளைகிறது. மேலும், மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழை பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது.