பீகார் சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
பீகாரில் 122 சட்டசபை தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.;
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 14-ந் தேதிநடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.
இடைத்தேர்தல்கள்
பீகார் சட்டசபை தேர்தலுடன், ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.தெலுங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.