இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு 61 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி 143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்று அறிவித்தது.;
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம்(நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு விரைவாக முடிவடைந்தது. அந்த கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்தன.
அதேநேரம் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் இந்த கட்சிகளிடையே எளிதில் புரிந்துணர்வை எட்ட முடியவில்லை. இதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அந்த கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து வந்தன.2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதில் ராஷ்டிரிய ஜனதாதளம் 143 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதன் மூலம் அந்த கட்சி மாநிலத்தில் 143 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட ஒரு இடம் குறைவாகும்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 54 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் புதிதாக மேலும் 7 பேர் கொண்ட புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இவை வால்மீகி நகர், அராரியா, அமார், பராரி, ககல்கான், சிகந்த்ரா(தனி), சபால் ஆகிய தொகுதிகள் ஆகும். இதன் மூலம் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் இந்த கட்சி 70 இடங்களில் களமிறங்கி இருந்தது. இதனால் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளிலேயே காங்கிரஸ் போட்டியிடுகிறது.
ராஷ்டிரிய ஜனதாதளம் 143 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இதில் 5 இடங்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பிற கட்சிகளும் போட்டியிடுகின்றன. அந்தவகையில் வைஷாலி, லால் கஞ்ச், ககல்கான் தொகுதிகளில் காங்கிரசை எதிர்த்தும், தாராபூர், கவுரா போரம் தொகுதிகளில் விகாஷீல் இன்சான் கட்சியை எதிர்த்தும் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்கள் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ராம் போட்டியிடும் குடும்பா தொகுதியிலும் ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளரை களமிறக்கும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அந்த தொகுதியில் வேட்பாளரை களமிறக்காததால் சர்ச்சை நீங்கியது.