பீகார் சட்டசபை தேர்தல்; வெற்றி பெறுவது யார்? கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
பீகார் சட்டசபையின் பதவி காலம் முடிவடைய உள்ள சூழலில், அந்த மாநிலத்தில் நவம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பீகாரில் இந்த ஆண்டு சிறப்பு வாக்காளர் திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) இதனை வரவேற்ற போதிலும், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியானது இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. எனினும், நேர்மையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்த சூழலில், 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற முடிவானது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதன் பின்னர், முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், சூறையாடுதல் போன்ற பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் உள்பட இறுதி வாக்கு பதிவு நிலவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வெற்றி பெறும் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் நிலவரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனினும், 14-ந்தேதி வெளிவரும் முடிவே இறுதியானது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.
இதில், போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ்-என்.டி.டி.வி. இந்தியா வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 133-159 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 75-101 இடங்களையும், ஜன சுராஜ் 0-5 இடங்களையும் மற்ற கட்சிகள் 2-8 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 133-148 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 87-102, ஜன சுராஜ் 0-2, மற்ற கட்சிகள் 3-6 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
மேட்ரிஸ் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 147-167 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்களையும், ஜன சுராஜ் 0-5 மற்ற கட்சிகள் 2-8 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
தைனிக் பாஸ்கர் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 145-160 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 73-91 இடங்களையும், ஜன சுராஜ் 0-3 மற்ற கட்சிகள் 5-7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
பி-மார்க் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 142-162 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 80-98 இடங்களையும், ஜன சுராஜ் 1-4 மற்ற கட்சிகள் 0-3 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
ஜே.வி.சி.-எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 135-150 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 88-103 இடங்களையும், மற்ற கட்சிகள் 3-7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
மும்பை மார்க்கெட் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 135-140 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 100-115 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
டெல்லி சட்டா பஜார் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 142-145 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 88-91 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 131 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 108 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் கட்சி 1, மற்ற கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.
இதனால், என்.டி.ஏ. கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்ற வகையில் பரவலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
முதல்-மந்திரி யார்?
இதேபோன்று பீகாருக்கான முதல்-மந்திரியாக விருப்ப தேர்வு செய்யப்பட்டவர்களின் சதவீதமும் வெளிவந்துள்ளது.
இதன்படி, பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட முடிவில்,
தேஜஸ்வி யாதவ்: 32%
நிதிஷ் குமார்: 30%
பிரசாந்த் கிஷோர்: 8%
சிராக் பாஸ்வான்: 8%
சாம்ராட் சவுத்ரி: 6%
ராஜேஷ் குமார்: 2%
மற்றவர்கள்: 14%
எந்தெந்த கட்சிகள், எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என கட்சி வாரியாக, பீப்பிள்ஸ் இன்சைட் விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதில்,
என்.டி.ஏ. கூட்டணி:
பா.ஜ.க. 68-72 இடங்கள்
ஐக்கிய ஜனதா தளம் 55-60 இடங்கள்
லோக் ஜனசக்தி - 9-12 இடங்கள்
எச்.ஏ.எம் 1-2 இடங்கள்
ஆர்.எல்.எம். 0-2 இடங்கள்
மகாகத்பந்தன் கூட்டணி:
ராஷ்டீரிய ஜனதா தளம் 65-72 இடங்கள்
காங்கிரஸ் கட்சி 9-13 இடங்கள்
இடதுசாரிகள்- 11-14 இடங்கள்
வி.ஐ.பி. 2-3 இடங்கள்
ஐ.ஐ.பி. 0-0 இடங்கள்
டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பை நாளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.