பீகாரில் முதன்முறையாக... வாக்காளர்கள் நீக்கம், வாக்கு மையங்கள் அதிகரிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், இந்த புதிய நடைமுறையானது, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.;
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தலையும் பீகார் சந்திக்க உள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்நிலையில், பீகாரில் நாட்டிலேயே முதன்முறையாக, அனைத்து வாக்கு மையங்களும் 1,200-க்கும் குறைவான வாக்காளர்களை கொண்ட முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.
இதில், மொத்தம் 96.23 சதவீத வாக்காளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்கீழ், கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதேபோன்று, வாக்கு மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நிற்பது தடுக்கப்படும் வகையிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, புதிதாக 12,817 வாக்கு மையங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இதனால், இதற்கு முன்பு 1,500 வாக்காளர்கள் என்பதற்கு பதிலாக, ஒரு வாக்கு மையத்திற்கு 1,200 வாக்காளர்கள் என திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், இதற்கு முன்பு இருந்த 77,895 என்ற எண்ணிக்கைக்கு பதிலாக, பீகாரில் புதிதாக 90,712 வாக்கு மையங்கள் இருக்கும்.
இந்த புதிய சாதனையானது, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கடைப்பிடிக்கப்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.