ஏர் இந்தியா விபத்து: விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்- மத்திய மந்திரி
ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி வெளிநாடு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.;
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பயணிகளும், விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டியின் ஒரு பகுதியான, விமானத்தின் பறப்பு உயரம், வேகம், இயந்திர செயல்பாடு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யும் விமானத் தரவு பதிவுக் கருவி (எஃப்.டி.ஆர்.) 13-ம் தேதி மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கருப்பு பெட்டியின் மற்றொரு பகுதியான, விமானி அறையின் உரையாடல்களைப் பதிவு செய்யும் குரல் பதிவுக் கருவி (சி.வி.ஆர்.) மீட்புக் குழுவினரால் தேடப்பட்டு, இரு தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் முழுமையான பாகங்களும் கிடைத்திருப்பதால், விபத்துக்கான காரணங்களை முழுமையாகக் கண்டறிய முடியும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருப்பு பெட்டியை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்களை மறுத்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: "கருப்பு பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகளே. கருப்பு பெட்டி இந்தியாவில்தான் உள்ளது. தற்போது, விமான விபத்து விசாரணைப் பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என்றார்.