டெல்லி-பாட்னா தேஜஸ் ராஜ்தானி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அச்சம்
ரெயிலில் அரை மணிநேரத்திற்கும் மேலாக வெடிகுண்டு சோதனை நடந்தது.;
பாட்னா,
டெல்லியில் இருந்து பீகாரின் பாட்னா நகர் நோக்கி தேஜஸ் ராஜ்தானி ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் கூறியுள்ளார்.
இதனால், நேற்றிரவு ரெயிலில் சோதனை நடந்தது. உடனடியாக, ரெயிலை நிறுத்தி விரிவான சோதனையில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் பிரிவினர், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீசார், அரசு நிர்வாகத்தினர், மண்டல அளவிலான அதிகாரிகள் உள்பட பலரும் ரெயிலில் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஏறக்குறைய அரை மணிநேரத்திற்கும் மேலாக இந்த வெடிகுண்டு சோதனை நடந்தது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், 31 நிமிடங்களுக்கு பின்னர் ரெயில் பாதுகாப்பாக புறப்பட்டு சென்றது. அதுவரை பயணிகள் அச்சத்துடனேயே இருந்தனர்.