விசா தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலதிபர்
இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலாவைச் சேர்ந்தவர் ஷிபு (வயது 48). இவர் வர்க்கலாவில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். வெளிநாட்டிலும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அயிரூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஷிபுவுக்கு எதிராக போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், வெளிநாட்டு வேலைக்கு செல்ல விசா தருவதாக கூறி ஷிபு அவரது வீட்டுக்கு தன்னை வரவழைத்தார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மயங்கிய நிலையில் கிடந்த தன்னை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது முதலில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தொிகிறது. இதையடுத்து இளம்பெண் கேரள முதல்-மந்திரி, டி.ஜி.பி. மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தார். அதன்பின்னர் தொழிலதிபர் ஷிபு மீது அயிரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தன்னை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இளம்பெண் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக ஷிபுவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே தலைமறைவான ஷிபுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.