உசிலம்பட்டியில் சாலையை கடந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: தாய், குழந்தை உள்பட 4 பேர் பலி
சாலையை கடந்தவர்கள் மீது அசுர வேகத்தில் வந்த கார் மோதி, தாய், குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.;
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி மற்றும் பேச்சியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த 7 பேர் நேற்று இரவு உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி ஊருக்கு திரும்பி சென்றனர். குஞ்சாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர்கள் அங்குள்ள விலக்கு பகுதியில் மதுரை-தேனி மெயின்ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த கார், சாலையை கடக்க முயன்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் அவர்கள் 7 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அந்த காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் பேச்சியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவருடைய மனைவி பாண்டிச்செல்வி(வயது 28), குஞ்சாம்பட்டியை சேர்ந்த ஜெயமணியின் தாயார் லட்சுமி(55), மனைவி ஜோதிகா (20), இவருடைய ஆண் குழந்தை பிரகலாதன்(3) ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.ஜெயபாண்டி, கருப்பாயி, ஜெயமணியின் பெண் குழந்தை கவியாழினி(1) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்து அறிந்ததும் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, 7 பேர் மீது மோதிய காரை ஓட்டிவந்தது, பூச்சிப்பட்டியை சேர்ந்த ஆனந்த் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.