தசரா யானைகளுடன் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த இன்ஸ்டா பிரபலம் மீது வழக்குப்பதிவு
இன்ஸ்டா பிரபலம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.;
பெங்களூரு,
கர்நாடகத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கிருதி ஏ.கே. இவர் மைசூரு தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள தசரா யானைகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தசரா யானைகளை அருகில் சென்று பார்க்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் பிளாஷ் போட்டு செல்போனில் தசரா யானைகளை படம் பிடிக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் கிருதி நள்ளிரவில் தனது தோழிகளுடன் 2 கார்களில் கரிகல்லுதொட்டி வழியாக அரண்மனை வளாகத்திற்குள் சென்று, தசரா யானைகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
குறிப்பாக யானைகளின் தும்பிக்கையை கட்டிப்பிடித்தும், அதன் அருகில் நின்றும், யானைகளின் தந்தத்தை கையால் பிடித்தும், பிளாஷ் போட்டு அவர் வீடியோ எடுத்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில் நள்ளிரவில் தசரா யானைகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கிருதி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிரபுகவுடா கூறுகையில், யானைகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு யாரையும் வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. தடையை மீறி அவர்கள் நள்ளிரவில் யானைகளை தங்க வைத்துள்ள பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களை யானை அருகே வீடியோ எடுக்க அனுமதித்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.