நடிகை ராக்கி சாவந்த்-முன்னாள் கணவர் மீதான வழக்குகள் ரத்து - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

ராக்கி சாவந்த் கணவர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.;

Update:2025-10-16 04:15 IST

மும்பை,

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த், தமிழில் ‘என் சகியே', ‘முத்திரை', ‘கம்பீரம்' உள்ளிட்ட படங்களில் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவரும், அடில் துரானி என்பவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு அவர்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர்.

அதுமட்டும் இன்றி ராக்கி சாவந்த் தனது முன்னாள் கணவர் அடில் துரானி மீது குற்றவியல் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

அதேபோல அடில் துரானியும், நடிகை ராக்கி சாவந்த் தனது ஆபாச வீடியோக்களை பரப்பி தன்னை அவதூறு செய்ததாக குற்றம் சாட்டினார். இந்தப்புகார்கள் குறித்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் ரேவதி மோகிதே தேரே மற்றும் சந்தோஷ் பாட்டீல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகை ராக்கி சாவந்த் மற்றும் அடில் துரானி இருவரும் நேரில் ஆஜராகி தங்களுக்கு இடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொண்டதாகவும், எனவே வழக்கை ரத்து செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், “இருவரும் இணக்கமான தீர்வை கண்டுள்ளதால் வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மற்றும் அதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்