பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
ஜி.எஸ்.டி. சேமிப்பு விழாவானது இந்த திருவிழா கொண்டாட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசினார்.;
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 126-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
அவர் இந்நிகிழ்ச்சியில் பேசும்போது, இந்த விழா காலங்களில் உள்நாட்டு பொருட்களை வாங்கி அர்த்தமுள்ள பண்டிகையாக அதனை உருவாக்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, உள்ளூர் பொருட்களை வாங்கி ஆதரவளிப்போம் என மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.
வருகிற நாட்களில், திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சிக்கான வெற்றியாக இருக்கும். ஒவ்வொரு திருவிழாவின்போதும் நாம் நிறைய பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வந்திருப்போம். ஆனால், இந்த முறை, ஜி.எஸ்.டி. சேமிப்பு விழாவானது நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுய சார்பை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்போம் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த புதிய ஜி.எஸ்.டி. முறையால், பழைய நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி.க்கு பதிலாக, இரண்டடுக்கு ஜி.எஸ்.டி. முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு பொருட்களுக்கான விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. நடுத்தர மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக இந்த ஜி.எஸ்.டி. முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்தது.