கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு- நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு நாற்காலிகள் வீசப்பட்டன.;
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அறப்போர் இயக்கம் சார்பில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சுரேஷ், பல்வேறு துறை நிபுணர்கள் குழுவினர், அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டனர். அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில், பொதுமக்களின் கருத்துகளை வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்தனர்.
அப்போது கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் மேஜையை சரமாரியாக தட்டினர். அப்போது, திடீரென்று கைகலப்பு ஏற்பட்டதால் நாற்காலிகளை மேலே தூக்கி வீசினர். இதில் வக்கீல் சுரேஷ் காயமடைந்தார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மண்டபத்துக்குள் இருந்து 2 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.கூட்டத்தை உடனே ரத்து செய்துவிட்டு, போலீசாரிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு பாதுகாப்புடன் நடத்துமாறு உத்தரவிட்டனர்.இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் தற்போது 120 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினோம்” என்றார். வக்கீல் வினோத்குமார் கூறுகையில், “கல்குவாரி உரிமையாளர்களிடம் கருத்து கேட்காமல், கூட்டம் நடத்தி, அவதூறு பரப்புகிறார்கள். எனவே இந்த கூட்டத்தில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்தோம்” என்றார்.