ஆந்திராவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் - சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் ஆந்திராவில் சுமார் 2.62 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
அமராவதி,
ஆந்திர மாநில அரசு அமல்படுத்திய ‘ஸ்ரீசக்தி’ திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.
இதன்படி சிறுமிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் ஆந்திர மாநிலம் முழுவதும் அரசு நகர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவண் கல்யான் ஆகியோர் பெண்களுடன் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் சுமார் 2.62 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் 11,449 பேருந்துகளில், சுமார் 74 சதவீத பேருந்துகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.