பீகார் துணை முதல்-மந்திரி வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
பிரமாண பத்திரத்தில் அவரது வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.;
பாட்னா,
பீகாரில் பா.ஜனதாவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். 2 தடவை எம்.எல்.சி.யாக இருக்கும் அவர், நீண்ட காலத்துக்கு பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தாராபூர் தொகுதியில் அவர் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக சாம்ராட் சவுத்ரி கூறியுள்ளார்.
ஆனால், பிரமாண பத்திரத்தில் அவரது வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவர் வாக்காளர் பட்டியல்படி தனது வயது 56 என்று கூறியுள்ளார். ஆனால், பள்ளிச்சான்றிதழ் எதையும் இணைக்கவில்லை. சாம்ராட் சவுத்ரி 1995-ம் ஆண்டு வழக்கு ஒன்றில், அப்போது தான் ‘மைனர்’ ஆக இருந்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து தப்பித்ததாக ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது அதிகபட்ச கல்வித்தகுதி ‘பி.எப்.சி.’ என்றும், காமராஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து அப்பட்டத்தை பெற்றதாகவும் சாம்ராட் சவுத்ரி கூறியுள்ளார். ஆனால் அவர் 10-ம் வகுப்புவரை கூட படிக்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களிலும் ‘பி.எப்.சி.’ என்றால் என்ன என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள்.