ராஜஸ்தான்: கைதுக்கு பயந்து பெண் வேடமிட்டு போலீசாரை திகைக்க வைத்த குற்றவாளி - வைரலாகும் வீடியோ

ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தயா சங்கர் என்பவர் சேலை, தாலி அணிந்து பெண்ணாக உருமாறியுள்ளார்.;

Update:2025-06-20 21:50 IST

ஜெய்பூர்,

கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் போலீசில் இருந்து கைதாகாமல் தப்பிப்பதற்காக மொட்டை அடிப்பது, தலைக்கு விக் வைப்பது என தங்களது அடையாளத்தை மறைப்பதற்கு பல்வேறு தகிடு தத்தம் வேலைகளிலும் ஈடுபடுவார்கள் என கேள்விப்பட்டிருப்போம்..

ஆனால் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி ஒருவர் பெண் வேடமிட்ட சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த தயா சங்கர் என்பவர் அம்மாநில போலீசாரால் தேடப்படும் 13 வழக்குகளில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

போலீசார் இவரை தேடி பல்வேறு இடங்களிலும் சுற்றித் திரிந்தனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு செயலை அந்த குற்றவாளி செய்வார் என போலீசார் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்தவகையில், ரவுடி தயாசங்கர் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக சேலை ஜாக்கெட் அணிந்து பெண் போலபோல வேடமிட்டு இருந்தார். தத்ரூபமாக அவர் ஒரு பெண் போலவே காட்சியளித்தார்.

ஒரு ரவுடி பெண் வேடமிடுவார் என போலீசார் நினைக்க மாட்டார்கள் என அவர் நினைத்திருப்பார் போலும். ஆனால் போலீசார் சும்மா விடுவார்களா ? பெண் வேடமிட்ட ரவுடியை அடையாளம் கண்டு கொண்ட அவர்கள் தயா சங்கரை கைது செய்து ரோட்டில் சேலை ஜாக்கெட் அணிந்தபடி அழைத்து வந்தனர். அவர் தனது முகத்தை மறைத்துக் கொண்டே கூனிக்குறுகி வந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தயா சங்கரை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். பலரும் போலீசாரே திகைக்க வைத்துள்ளாரே என்று கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்