ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.;

Update:2025-10-24 02:42 IST

புதுடெல்லி,

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், முப்படைகளின் போர்த்திறனை அதிகரிப்பதற்காக ரூ.79 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இதுவாகும். கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நேற்றைய கொள்முதல் திட்டங்களில், இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள், 30 எம்எம் ரக கடற்படை பீரங்கிகள், அதிநவீன இலகுரக நீர்மூழ்கி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும். போர்க்கப்பல்கள், கனரக சாதனங்களையும், தரைப்படை வீரர்களையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். இலகுரக நீர்மூழ்கி குண்டுகள், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க பயன்படும்.

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக, நாக் ஏவுகணை அமைப்பு, எம்கே-2 ரக ஏவுகணைகள், எலக்ட்ரானிக் உளவு அமைப்பு உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை தகர்க்க எம்கே-2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்