ரூ. 13 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: சிக்கிம் நபர் கைது

டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.;

Update:2026-01-19 14:47 IST

டெல்லி,

தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தி வந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கும்பல் விநியோகம் செய்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட விரேந்திர பசோயா, அவரது மகன் ரிஷப் ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றனர். இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கடத்தல் கும்பல் தொடர்பாக டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சிக்கிமை சேர்ந்த நபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் சிக்கிமை சேர்ந்த திலக் பிரசாத் சர்மா (வயது 40) என்பது தெரியவந்தது. திலக் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கஞ்சா கடத்தி வருவது, அதை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட திலக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்