டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: - வெளியானது நடுங்கவிடும் சிசிடிவி காட்சி

டெல்லி கார் வெடிப்பில் சம்மந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-11-11 08:58 IST

புதுடெல்லி,

நேற்று (10-11-2025) மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் இருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நிலைகுலைந்து போயினர். இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு பணி துரிதமாக நடந்தது.

இந்த பயங்கர சம்பவத்தில் 9 பேர் உடல் சிதறி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களது விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் 20க்கும் மேற்பட்டோர் பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. காயம் அடைந்தவர்கள் அதன்மூலம் எடுத்துச்செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார் வெடித்துச் சிதற காரணம் என்ன? என்று தெரியவில்லை. பேட்டரி கோளாறு களால் வெடித்ததா? அல்லது கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதா? என கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ அணைத்து முடிக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் BNS வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பில் சம்மந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கார் சென்ற இடங்களில் சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன்படி கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உள்டப 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது. குண்டுவெடிப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவானது. காரை ஓட்டியவர் ஒல்டு டெல்லி ரெயில் நிலையத்தில் உறவினரை இறக்கிவிட்டு விட்டு திரும்பியுள்ளார்; டெல்லிக்குள் ஐ20 வாகனம் பதர்பூர் எல்லை வழியாக டெல்லியில் நுழைந்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்