டெல்லியில் இடைவிடாத மழை: சுதந்திர தினவிழாவுக்கு இடையூறுகள் ஏற்படுமா..?

டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதில் மரம் விழுந்து ஒருவர் பலியானார்.;

Update:2025-08-15 06:54 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் மழைக்கு 12-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் நேற்றும் அதிகாலையில் கனமழை பெய்தது. சில இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பிறகு மழை பெய்ய தொடங்கிவிட்டது.

மழை இடைவிடாது விடிய விடிய பெய்தது. விடிந்த பிறகும் வெளுத்து வாங்கியது. காலை 10 மணிக்கு பிறகும் லேசான மழை பல இடங்களிலும் பெய்து கொண்டே இருந்தது. பகல் ஒரு மணிக்கு பிறகும் கூட தூறல் இருந்தது. டெல்லியைப் பொறுத்தவரை குறிப்பாக லஜ்பத் நகர், ஆர்.கே.புரம், லோதி ரோடு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது.

இடைவிடாத இந்த கனமழையால் டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பல இடங்களில் வெள்ளம் குளமாக தேங்கி நின்றது. வாகனங்கள் அதில் நீந்தியபடியே சென்றன. வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சுவர்கள் இடிந்து விழுந்து சில பாதிப்புகள் ஏற்பட்டன. ரெயில் மற்றும் விமான போக்குவரத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. பல விமானங்கள் தாமதத்தை சந்தித்தன.

டெல்லியைப் போல நொய்டா, குருகிராம் பரிதாபாத், காசியாபாத் போன்ற இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் டெல்லி எல்லை சாலைகளில் தண்ணீர் தேங்கி மிக அதிக அளவிலான போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது. மழையின் இந்த வேகத்தால் டெல்லி மற்றும் சுற்றுப்புற இடங்களுக்கு நேற்று சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டது.

ஒருவர் பலி

கனமழை காரணமாக டெல்லியில் உள்ள கல்காஜி சாலை பகுதியில் உள்ள பழமையான மரம் ஒன்று திடீரென அடியோடு சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சுதீர்குமார் (வயது 50), அவரது மகள் பிரியா (23) ஆகியோர் மீது மரம் விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த சுதீர்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களும், சில மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. மரம் விழும் காட்சி அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தற்போது வைரலாகி உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இடைவிடாத மழையின் காரணமாக சாலைகளில் கரைபுரண்ட வெள்ளம் யமுனை நதியை கடல் போல ஆக்கியது. யமுனை ஆற்றில் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை தாண்டியது. அபாய அளவான 205.35 மீட்டரையும் தொடக்கூடும் என்பதால் யமுனையின் கரையோரப் பகுதி மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்கிடையே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பலர் மேடான இடம் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள். யமுனையின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.

சுதந்திர தினவிழா

இந்த நிலையில் மழையின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 17-ந் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் செங்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள சுதந்திர தின விழாவுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமோ? என அச்சம் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்