டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவுகிறதா..? - அச்சத்தில் மக்கள்
விலங்கியல் பூங்காவில் 2 வண்ண நாரைகள் உயிரிழந்ததையடுத்து பறவைக்காய்ச்சல் பரவுகிறதா என அச்சம் எழுந்துள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விலங்கியல் பூங்காவின் இயக்குனர் சஞ்சீத்குமார் கூறுகையில், “இறந்துபோன வண்ண நாரைகளின் மாதிரிகள் கடந்த 27-ந்தேதி போபாலில் உள்ள தேசிய விலங்கு நோய்களுக்கான நிறுவனத்துக்கு பறவைக்காய்ச்சல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அந்த 2 மாதிரிகளிலும் ‘எச்.எஸ்.என்.1’ என்கிற பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது 28-ந்தேதி உறுதி செய்யப்பட்டது.
இது மற்ற விலங்குகள், பறவைகள் மற்றும் பூங்காவின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பரவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உயிரியல் பாதுகாப்பு நெறிமுறையை வலுப்படுத்துவதற்காக, உயிரியல் பூங்கா ஆகஸ்டு 30-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
பறவைக்காய்ச்சல் பறவைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பரவும் என்பதால், மேற்படி பறவைக்காய்ச்சல் உறுதி தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது அதிகரித்து இருக்கிறது. ‘சிக்கன்’ சாப்பிடுவதையும் மக்கள் குறைத்துள்ளனர். வெளியிடங்களுக்கு செல்வதையும் தவிர்த்து உள்ளனர்.