டிஜிட்டல் கைது மோசடி; ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.83 லட்சம் பறிப்பு

ஆசிரியை பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் மர்மநபர் கூறியுள்ளார்.;

Update:2025-06-02 04:52 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்மநபரிடம் இருந்து செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர் முனையில் பேசியவர் தன்னை மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியை பெயரில் பார்சல் ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறினார். இதுகுறித்த விசாரணைக்காக மே 20-ந் தேதி முதல் 30-ந்தேதிவரை 11 நாட்கள் ஆசிரியை டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அதுவரை வீட்டை, விட்டு எங்கும் செல்லக்கூடாது. சென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு ஓய்வு பெற்ற ஆசிரியை அதிர்ச்சியில் உறைந்தார். பயத்தில் அந்த நபர் கூறியதை எல்லாம் செய்தார். மேலும் வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக அவர் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.83 லட்சம் வரை செலுத்தினார்.

இதனால் அவர் கடைசி கால சேமிப்பு முழுவதும் கரைந்தது. ஆனால் மர்மநபர் ஆசிரியையை விடுவதாக இல்லை, மேலும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அப்போதுதான் ஆசிரியைக்கு இதில் ஏதோ தவறு இருப்பது புலப்பட்டது. எனவே இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

எனவே குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடி பேர்வழியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்