'பெண்களை இழிவுபடுத்திய மதகுரு..' வீடியோ வெளியிட்ட தீஷா பதானியின் சகோதரிக்கு வலுக்கும் கண்டனம்

லிவ்-இன் முறை பற்றி விமர்சிக்கும்போது பெண்களை பற்றி மட்டும் இழிவாக பேசுவது ஏன்? என குஷ்பூ பதானி கேள்வி எழுப்பினார்.;

Update:2025-08-03 21:57 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை தீஷா பதானியின் சகோதரி குஷ்பூ பதானி. இவர் இந்தியா ராணுவத்தில் மேஜராக பணியாற்றியுள்ளார். தற்போது உடல்நல பயிற்சியாளராகவும் பணியாற்றி வரும் இவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் ஆன்மீக சொற்பொழிவாளரும், மதகுருவுமான அனிருத்தாச்சாரியா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மதகுரு அனிருத்தாச்சாரியா, லின்-இன் வாழ்க்கை முறை குறித்து பேசிய கருத்துக்கு குஷ்பூ பதானி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக குறிப்பிட்ட குஷ்பூ பதானி, "இவரைப் போன்ற நபர்கள் நாட்டிற்கே எதிரானவர்கள். லிவ்-இன் முறை பற்றி விமர்சிக்கும்போது பெண்களை பற்றி மட்டும் இழிவாக பேசுவது ஏன்? தவறான முடிவை எடுத்து 2 குடும்பங்களை கஷ்டப்படுத்துவதற்கு பதில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? " என்று கேள்வி எழுப்பினார்.

குஷ்பூ பதானியின் கருத்துக்கு மற்றொரு ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜ் பதிலளித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "சாக்கடையில் கிடக்கும் புழுவை எடுத்து அமிர்த கலசத்தில் போட்டாலும், அந்த புழுவிற்கு அது பிடிக்காது. அதுபோல் முட்டாள்களுக்கு நல்ல அறிவுரை கூறினால் அவர்களுக்கு அது பிடிக்காது. மக்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் பேசுகிறோம். சில நேரங்களில் நாங்கள் கடுமையாகவும் பேச வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார். இந்த நிலையில், குஷ்பூ பதானியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்