மராட்டியத்தில் சர்ச்சையை கிளப்பிய டாக்டர் தற்கொலை சம்பவம்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

பெண் டாக்டர் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-10-24 21:52 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று இரவு பல்தான் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், பெண் டாக்டரின் கையில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பெண் டாக்டர் தனது உள்ளங்கையில் அந்த குறிப்பை எழுதிவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதில், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் காவலர் பிரசாந்த் பங்கர் ஆகிய இருவரும் கடந்த 5 மாதங்களாக தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்து வந்ததாகவும், உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் பெண் டாக்டர் எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்கள் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். இது குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி ரூபாலி சகாங்கர் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாரா மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரையும் தப்ப விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உயிரிழந்த பெண் டாக்டர், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் 2 வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். அங்கு அவரிடம் போலியான பிரேத பரிசோதனை அறிக்கைகளை தயார் செய்யுமாறு போலீசார் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக, உயிரிழந்த பெண் டாக்டரின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. அலுவலங்களில் ஏற்கனவே புகார் அளித்தாகவும், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெண் டாக்டர் கடந்த ஜூன் 19-ந்தேதி அளித்த புகார் மனுவில், “எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? எங்கள் மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார் எனவும், டி.எஸ்.பி. அவரை தொடர்பு கொண்டு பேசுவதாக கூறிய நிலையில், மீண்டும் அவர் பேசவே இல்லை எனவும் உயிரிழந்த பெண் டாக்டரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

பெண் டாக்டர் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானேவை சஸ்பெண்ட் செய்து மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கை போதாது என்றும், சம்பந்தப்பட்ட காவலர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் விசாரணையில் தலையிட வாய்ப்பு உள்ளது என பெண் டாக்டரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து மராட்டிய மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நம்தேவ்ராவ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாவலரே வேட்டைக்காரராக மாறியுள்ளார். காவல்துறையினரின் கடமை பாதுகாப்பதுதான், ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரை துன்புறுத்தினால் நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும்? அந்த பெண் முன்பு புகார் அளித்தபோது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? மகாயுதி அரசாங்கம் காவல்துறையினரை மீண்டும் மீண்டும் பாதுகாக்கிறது. இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்