காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள் - உமர் அப்துல்லா
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.;
ஸ்ரீநகர்,
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் உள்பட பலர் கைதுசெய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், டெல்லி சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது;
“டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமும் இதை அனுமதிக்காது. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதிகளோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களோ அல்ல. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம். குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.