வரதட்சணைக்கொடுமை: தாயுடன் சேர்ந்து மனைவியை எரித்துக்கொன்ற கணவன்: உ.பியில் கொடூரம்

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் மற்றும் மாமியார் சேர்ந்து மனைவியை அடித்து, தீ வைத்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.;

Update:2025-08-24 15:56 IST

நொய்டா,

கிரேட்டர் நொய்டா சிர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் விபின். இவரும் நிக்கி என்ற பெண்ணும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த ஆறு மாதங்களிலிருந்து வரதட்சணையாக கூடுதல் பணம் கேட்டு கணவரின் குடும்பத்தினர் நிக்கியை துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழனன்று கொடூரத்தின் உச்சமாக நிக்கி கடுமையாக தாக்கப்பட்டதோடு, உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

ரூ.36 லட்சம் வரதட்சணை தரப்படவில்லை என்ற காரணத்தால், விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாகத் தாக்கி, ஆசிட் ஊற்றி தீவைத்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கணவன் மற்றும் மாமியார் நிக்கியை அடித்து, தலைமுடியைப் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை நிக்கியின் சகோதரி காஞ்சன் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, தீக்காயங்களால் நிக்கி உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் சகோதரியின் புகாரின் பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கசானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிக்கியின் கணவர் விபின் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார், மாமனார் மற்றும் மைத்துனரை கைது செய்ய தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற விபினை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்