போதையில் போலீசை தாக்கிய தாதா; அடுத்து காத்திருந்த அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ

நீங்கள் தவறு செய்திருந்தபோதும் கூட, உங்களை அடிக்கும் உரிமை போலீசாருக்கு கிடையாது என ஒய்.எஸ்.ஆர். கட்சியின் செய்தி தொடர்பாளர் ராம்பாபு தெரிவித்து உள்ளார்.;

Update:2025-05-27 18:27 IST

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிரஞ்சீவி என்ற கான்ஸ்டபிளை அந்த பகுதியை சேர்ந்த தாதா லட்டு என்பவர் மதுபோதையில் தாக்கியுள்ளார். இந்நிலையில், அவரை தேடி வந்த போலீசார், லட்டுவின் கூட்டாளிகளான விக்டர், பாபுலால் மற்றும் ராகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களை பொது வெளியில் வைத்து போலீசார், லத்தியால் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அம்பத்தி ராம்பாபு எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் போலீஸ்காரர், 3 பேரில் ஒருவரின் காலில் முதலில் மெதுவாக அடித்து பரிசோதிக்கிறார். இதன்பின்னர், அந்த நபரின் கால்களில் ஓங்கி அடிக்கிறார். இதனால், வலியால் அந்த நபர் அலறுகிறார். விடாமல் அவர் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. 6 முறை அடித்ததும், வலி பொறுக்க முடியாமல் அந்த நபர் கால்களை பின்னுக்கு இழுக்கிறார்.

போலீசார் சத்தம் போட்டதும் மீண்டும் காலை பழைய நிலைக்கு கொண்டு செல்கிறார். 7-வது முறையும் அடி விழுகிறது. அப்போது, மன்னித்து கொள்ளுங்கள் சார் என் அந்த நபர் கெஞ்சுகிறார். ஆனால், அவரை நேராக அமரும்படி கூறி விட்டு, 3 முறை அடிக்கிறார். இதனால் வலியால் அந்த நபர் அழுகிறார். அவரை நகர்ந்து போக கூறிய பின்பு, மற்றொரு நபருக்கு 10 முறை அடி விழுகிறது. அவரும் போலீசிடம் கெஞ்சுகிறார்.

கடைசியாக இருந்த நபரை அடிக்க போலீஸ்காரர் தயாரானபோது, மற்றொரு நபர் புதிய லத்தி ஒன்றை எடுத்து வந்து கொடுக்கிறார். இந்த முறை 3-வது நபர் காலை எடுக்காமல் இருப்பதற்காக போலீஸ்காரர் ஒருவர் அந்நபரின் கால்கள் மீது பூட்ஸ் அணிந்த காலால், அந்த வாலிபரின் கால் மீது வைத்து அழுத்தி பிடித்து கொள்கிறார். தொடர்ந்து லத்தியால் அடி விழுகிறது.

கடைசியில் அடியை நிறுத்தி, எழுந்து போக கூறியும் அந்த நபர் எழ முடியாமல் அதே இடத்தில் வலியால் அழுதபடி வீடியோவில் காணப்படுகிறார். பொதுவெளியில் 3 பேரை போலீசார் லத்தியால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபற்றி ராம்பாபு வெளியிட்ட செய்தியில், நீங்கள் தவறு செய்திருந்தபோதும் கூட, உங்களை அடிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. குடிமக்களின் உரிமைகள் இல்லாத பாபுவின் ஆட்சியிது. நீதிக்காக போராட செல்வோம் என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்