‘இந்தியா வெடிமருந்து உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற வேண்டும்’ - ராஜ்நாத் சிங்
பல வகையான வெடிமருந்துகள் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் சூரியசக்தி ஆலையில் மீடியம் காலிபர் வெடிமருந்து உற்பத்தி தொகுதியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“வெடிமருந்து துறையில் நீண்ட காலமாக பற்றாக்குறையை உணர்ந்து வந்தோம். வெடிமருந்து பற்றாக்குறை நமது பாதுகாப்பை பாதித்த நாட்கள் எனக்கு நினைவில் உள்ளது. நம்மிடம் தளவாடங்களும், உபகரணங்களும் இருந்தன. ஆனால் வெடிமருந்து பற்றாக்குறை இருந்தால், அந்த உபகரணங்களின் பயன்பாடு குறைவாகவே இருந்தது.
நம்மிடம் எவ்வளவு நவீன உபகரணங்கள் இருந்தாலும், வெடிமருந்து பற்றாக்குறை அதன் செயல்திறனை மட்டுப்படுத்தியது. அத்தகைய சூழ்நிலை ஒரு வளமான மற்றும் திறமையான தேசத்திற்கு ஏற்றது அல்ல.
இன்று, வெடிமருந்து உற்பத்தியில் நாம் படிப்படியாக ஆனால் சீராக முன்னேறி வருகிறோம். வேகம் மட்டுமின்றி, தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் நாம் முன்னேறுகிறோம். இது நமது பாதுகாப்புத் தயார்நிலைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையாகும்.
வெடிமருந்து உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும். இன்று பல வகையான வெடிமருந்துகள் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வரும் காலங்களில், பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்கு 50 சதவீதத்தை எட்டுவதை உறுதி செய்வோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.