ஜார்க்கண்ட்: ரூ. 70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
கஞ்சாவை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்;
ராஞ்சி,
ஒடிசாவில் இருந்து ஜார்க்கண்ட்டிற்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஒடிசா எல்லையோர மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள பல்கொட் பகுதியில் வந்த 2 லாரிகளை மறித்து சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் லாரிகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட 132 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும்.
இதையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.