வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயிலில் உணவு மற்றும் சிற்றுண்டி சப்ளை ஒப்பந்தத்தை கைப்பற்றிய அசாம் நிறுவனம்
நாட்டின் முதலாவது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
புதுடெல்லி,
இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்தன. பின்னர் அவற்றின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
இதைத்தொடர்ந்து இந்த ரெயில்களின் இயக்கத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேற்கு வங்காளத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி (காமாக்யா) இடையே முதலாவது ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் இருந்து அசாமின் கவுகாத்தி இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில் உணவு மற்றும் சிற்றுண்டி சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை கவுகாத்தியை சேர்ந்த பிரபல சொகுசு ஓட்டல் நிறுவனமான மேபேர் ஸ்பிரிங்வேலி ரிசார்ட் கைப்பற்றியுள்ளது. இதற்காக இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஒப்பந்தமிட்டுள்ளது.
பராம்பரிய வங்காளி-அசாம் உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளை தேர்வு செய்து சுவையான தரமான முறையில் பயணிகளுக்கு உயர்தரமாக வழங்க ஓட்டல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உணவு பட்டியலில் பசந்தி புலாவ், சோலார் மற்றும் மூங் பருப்பு, சணார் மற்றும் தோகர் தயாரிப்புகள், அசாமின் ஜோஹா அரிசி, மதி மொஹோர் மற்றும் மசூர் பருப்பு, பருவகால காய்கறி பொரியல்கள், மேலும் சந்தேஷ், தேங்காய் பர்பி, ரசகுல்லா போன்ற பிராந்திய இனிப்புகள் இடம்பெற்றுள்ளன.