சத்தீஷ்கார் எல்லையில் என்கவுன்ட்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நவீன ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.;
கட்சிரோலி,
மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம், சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டம் இணைந்த எல்லைக்கு அருகில் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கட்சிரோலி போலீசார் நக்சல் எதிர்ப்பு கமாண்டோ படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொண்ட கூட்டுக்குழுவின் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
கடந்த 2 நாட்களாக அங்கு பாதுகாப்பு படையினர் தீ விர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதை தொடர்ந்து சுதாரித்து கொண்ட பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். அவர்களுக்கு இடையே 8 மணிநேரத்திற்கு மேலாக துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சில நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் பாதுகப்பு படையினர் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்களை மீட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அப்பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்றது.