31-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி
எதிர்பாராதவிதமாக 31-வது மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரின் இந்திரபுரம் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவில் சத்தியம் திரிபாதி (வயது27) என்ற மென்பொருள் என்ஜினீயர், தனது நண்பர் ஹர்திக் சிங் மற்றும் கட்டிட விற்பனையாளருடன் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தார். அவர்கள் விற்பனைக்கு வந்த பிளாட் ஒன்றை பார்வையிடுவதற்காக சென்றதாக தெரிகிறது.
அவர்கள் சுமார் 50 நிமிடங்கள் அங்கு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக என்ஜினீயர் திரிபாதி 31-வது மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதுகுறித்து ஹர்திக் சிங் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து திரிபாதியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். அவர் தள்ளிவிடப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.