போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டு; பெயர் விவரங்களை பகிர ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் அதிகாரி கடிதம்
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, போலி வாக்காளர்கள் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடியும் அதுபற்றி அவையில் விளக்கம் அளித்து பேசினார். இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், மீண்டும் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அதில், கர்நாடகாவில் 1 லட்சத்து 250 வாக்குகளில் திருட்டுத்தனம் நடந்துள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார்.
அவருடைய இந்த பரபரப்பு குற்றச்சாட்டை அடுத்து, ராகுல் காந்திக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ அறிவிக்கையை இன்று மாலைக்குள் தரும்படியும் கேட்டு கொண்டுள்ளது.
இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.