ரூ.3 ஆயிரத்திற்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்; மத்திய மந்திரி கட்காரி அறிவிப்பு

கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிகம் சாராத தனியார் வாகனங்களுக்காக இந்த பாஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-06-18 15:21 IST

புதுடெல்லி,

நாட்டில் நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதனை விட பெரிய கனரக வாகனங்கள் செல்லும்போது, அவை சுங்க சாவடிகளை கடந்து செல்லும். அப்போது சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் காத்திருப்பு நேரம் அதிகரித்தல், போக்குவரத்து நெருக்கடி மற்றும் சுங்க சாவடிகளில் வாக்குவாதங்கள் போன்றவற்றுக்கான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், விரைவாக சுங்க சாவடியை கடந்து செல்ல முடியாத சூழல் போன்ற அசவுகரிய நிலையை தவிர்க்க, பாஸ்டேக் என்ற கட்டண அமைப்பை அரசு அறிமுகப்படுத்தியது. இதனால், வாகனங்கள் எளிதில் சுங்க சாவடியை கடந்து செல்ல முடியும்.

இந்த பாஸ்டேக், ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பம் உதவியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகனங்களில் இதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து சென்றதும், அந்த பாஸ்டேக் உதவியுடன், வங்கி கணக்கில் இருந்தோ அல்லது பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்ட கட்டணம் செலுத்தும் வசதி வழியாகவோ அந்த வாகனத்திற்கான சுங்க கட்டணம், பிடித்து கொள்ளப்படும்.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கான மந்திரி நிதின் கட்காரி, தடையில்லா நெடுஞ்சாலை பயணத்திற்காக ரூ.3 ஆயிரம் விலையிலான ஆண்டு பாஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என இன்று அறிவித்து உள்ளார்.

இந்த பாஸ்டேக் அடிப்படையிலான பாஸ் ஆனது, வருகிற ஆகஸ்டு 15 முதல் நடைமுறைக்கு வரும். அந்த பாஸ் செயல்பாட்டுக்கு வந்த தேதியில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது 200 பயணமோ, எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் செல்லுபடியாகும். கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிகம் சாராத தனியார் வாகனங்களுக்காக இந்த பாஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது என கட்காரி எக்ஸ் சமூக பதிவில் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, ஒரு சுங்க சாவடியை வாகனம் கடந்து சென்று விட்டால் அது ஒரு பயணம் என கணக்கில் கொள்ளப்படும். இதனால் காத்திருப்பு நேரம் குறைதல், போக்குவரத்து நெருக்கடி நீங்குதல் மற்றும் சுங்க சாவடிகளில் வாக்குவாதங்கள் குறைதல் போன்ற எளிமையான சூழல் ஏற்படும். இந்த பாஸ், கோடிக்கணக்கான தனியார் வாகன உரிமையாளர்கள் விரைவாக மற்றும் சுமுக பயண அனுபவம் பெறுவதற்கான நோக்கம் கொண்டது என கட்காரி கூறியுள்ளார்.

இதற்காக, ராஜ்மார்க் யாத்ரா செயலி, இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் லிங்க் (இணைப்பு) ஒன்று ஏற்படுத்தப்படும். இதனை கொண்டு, இந்த பாஸ்-ஐ எளிதில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் மற்றும் புதுப்பித்து கொள்ளவும் முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்