கடன் தொல்லையால் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்
பவிசங்கர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் பவிசங்கர்(வயது 33). இவர், எர்ணாகுளம் மாவட்டம் எளமக்கரா அருகே போனேக்கரா அடுத்த பானாவள்ளி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தார். தொடர்ந்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இவரது மனைவி ஸ்னாஷா(28), மகள் வாசுகி(6). 1-ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்னாஷா எடப்பள்ளி அருகே உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். தொடர்ந்து வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அவர், கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து கணவர் பவிசங்கரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுபற்றி உறவினர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் வந்து தட்டியும் கதவை பவிசங்கர் திறக்கவில்லை. இதையடுத்து இதுகுறித்த புகாரின் பேரில் எளமக்கரா போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சிறுமி வாசுகி உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தாள். பவிசங்கர், மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக களமச்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மகள் வாசுகியை பவிசங்கர் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் கடன் தொல்லை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.