இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; லக்னோவில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-18 14:40 IST

புதுடில்லி:

தலைநகர் டெல்லியிலிருந்து மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா நகருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் கழிப்பறையில், வெடிகுண்டு மிரட்டல் எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் ஒன்று கண்டறியப்பட்டது. விமானத்தின் லக்கேஜ் பகுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு மருந்துகள் இருந்ததால், விபரீதம் ஏற்படக்கூடும் எனக் கருதி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாக விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் லக்னோ விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானம் தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.இதையடுத்து, விமானம் மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றது. எனினும், விமானம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்