தமிழ் அல்லது சமஸ்கிருதம்... உலகின் உயிர்ப்புடன் உள்ள மூத்த மொழி எது? பிரபல பாடலாசிரியர் பதில்
உருது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகியிருக்காது என அவர் கூறினார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இலக்கிய திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான இலக்கிய திருவிழா, கடந்த 15-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், உலக அளவில் அரசியல், இ, அறிவியல் மற்றும் பிற கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதில், அறிவார்ந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரான ஜாவித் அக்தர் பங்கேற்றார். அப்போது அவர்களை நோக்கி பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒருவர் சிக்கலான கேள்வி ஒன்றை எழுப்பினார். உருது அல்லது சமஸ்கிருதம்.. எந்த மொழி இவையிரண்டில் பழமையானது? என கேட்டார்.
என்ன மாதிரியான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்? என கூறி விட்டு, சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது. சமஸ்கிருதம் உலகின் 2-வது தொன்மையான உயிர்ப்பான மொழி என கூறினார். உருது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகியிருக்காது என்றார்.
ஆனால் கேள்வி எழுப்பியவர் மீண்டும் அவரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார். அதற்கு அவர், தமிழ் உலகின் மிக பழமையான மொழியாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சமஸ்கிருதம் 2-வது பழமையான மொழி என்றார். ஒரு மொழியை விட மற்றொன்று உயர்ந்தது என கூற மறுத்த அவர், சமஸ்கிருதம், உருது அல்லது தமிழ் ஆகியவை ஆயுதங்கள் அல்ல. அவை வார்த்தைகளால் மக்களை இணைக்கும் பாலங்கள் போன்றவை என கூறினார்.