அசாம் நிலத்தை ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அசாம் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.;
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வா சர்மா செயல்பட்டு வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், 2 அம்ரித் பாரத் ரெயில்களையும் தொடங்கி வைத்தார்.
இதன்பின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
அசாமில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அசாம் நிலத்தை ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது. சட்டவிரோத அகதிகள் வனப்பகுதிகள், விலங்குகள் வழித்தடங்கள், பழமையான பகுதிகளை ஆக்கிரமித்தனர். ஆனால், நிலத்தை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை அகற்றி அசாமின் அடையாளம், கலாச்சாரத்தை பாஜக அரசு பாதுகாத்தது. எதிர்மறை அரசியல் கருத்துக்களை தெரிவித்ததால் மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது. நாட்டு மக்களின் முதல் தேர்வு பாஜகவாக உள்ளது. நல்ல நிர்வாகம், வளர்ச்சிக்காக பாஜகவை வாக்காளர்கள் நம்புகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.